மார்பு புற்று நோய் - கருச்சிதைவு - கர்ப்பம் (குழந்தை) வளர்ச்சி அடையாத பிரச்சனை தீர்க்கும் திருத்தலம் !
இடுசுரை கர்ப்பம் - ஒரு பெண்ணின் கர்ப்பப்பை அல்லாது வேறு இடத்தில் கர்ப்பம் தாங்கும் முறையைக் குறிக்கும் சித்த மொழியாகும்.
தாயுமான சுக சித்தரின் திருஉருவச் சிலையை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் இன்றும் தரிசித்து பயன்பெறலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களும், கர்ப்பம் தாங்கிய பின் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறால் வருந்துவோரும், கர்ப்பம் தாங்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பலம் இழந்தோரும் நற்சந்ததி பெற இப்பெருமானை வணங்கி இளநீர் தானம் அளித்து வந்தால் தங்கள் குறைபாடுகள் நீங்கப் பெறுவர்.
திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடைநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்திற்கு முன் தோன்றிய பெருமையை உடையது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்குப் பின் அத்தம்பதிகள் வெகுநாட்களாக குழந்தை பேறில்லாமல் இருந்தார்கள் அல்லவா? பின்னர் ஐயர்மலை ஈசனருளால் அந்தத் தெய்வீக தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. ஆனாலும், கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு போதிய உடல் வளர்ச்சி இல்லாததை அறிந்த அரண்மனை ராஜ வைத்தியர்கள் மீனாட்சி அம்மனை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்திற்கு சென்று வருமாறு வேண்டினர்.
அக்காலத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் தாயுமான சுக சித்தர் என்று திருநாமம் தாங்கிய ஓர் அற்புத சித்த பிரான் அங்கு தவம் இயற்றி வந்தார். அவருடைய தவம் என்னவென்றால் யாருடைய கர்ப்பத்தில் குழந்தை போதுமான வளர்ச்சி இன்றி இருக்கிறதோ அவர்கள் இப்பெருமானை வேண்டினால் அவர்களுடைய கர்ப்பத்தில் உள்ள சிசுவை இவர் தன்னுடைய வயிற்றுக்கு மாற்றிக் கொண்டு விடுவார். சரியாக 54 நாட்கள் கழிந்ததும் மீண்டும் அக்குழந்தைக்கு உரிய தாய்க்குக் குழந்தையை மாற்றி விடுவார்.
இந்த இடுசுரை சித்தியை பிரயோகம் செய்ய உதவும் மூலிகைகளும் உண்டு. இந்த அற்புதமான மூலிகைகள் வெள்ளியங்கிரிப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. குள்ளகா, மப்புகா என்ற மலை வாழ் இன மக்கள் மட்டுமே இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். தங்களின் அன்புக் காணிக்கையாக இத்தகைய மூலிகைகளை தாயுமான சுக சித்தருக்கு அவ்வப்போது அவர்கள் அளித்து வந்தனர்.
அத்தகைய அற்புத மகானை ஸ்ரீசுந்தர பெருமானும் மீனாட்சி தேவியும் வணங்கி தங்கள் குறையைத் தெரிவிக்கவே சித்தபிரானும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று மீனாட்சி தேவிக்காக 54 நாட்கள் கர்ப்பம் தாங்கி உக்கிர வழுதி பாண்டியனைப் பெற்றெடுக்க அற்புத சேவை புரிந்தார்.
தற்காலத்தில் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறு உடையவர்கள் அதை அழித்து விடுவதைக் காண்கிறோம். இது தெய்வீகத்திற்கு முற்றிலும் ஏற்புடையது அன்று.
இத்திருத்தலம் பெண்களின் மார்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக மார்பு புற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஸ்ரீதன சக்திகள் பொலியும் தலமாகும். இத்தல அம்பிகைக்கு உருண்டை மஞ்சள், கொம்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்ற மூன்று வித மஞ்சளை கையால் அரைத்து அபிஷேகம் நிறைவேற்றி வந்தால் பெண்களுக்கு வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும், சிறப்பாக மார்பு சம்பந்தமான நோய்களுக்கு எளிதில் நிவாரணம் கிட்டும். தாய்மைப் பேறு அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் ஏங்கினால் அவர்களுக்கு இத்தகைய வழிபாடு உறுதுணை புரியும். (Source - http://www.kulaluravuthiagi.com/thala.html)